தென்காசியில் மலைப்பாம்பு பிடிபட்டது
தென்காசியில் வாய்க்காலில் கிடந்த மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாய்க்கால் தண்ணீரில் ஒரு மலைப்பாம்பு கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தீயணைப்பு படையினர் அங்கு சென்று மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அது பிடிபடாமல் தப்பி விட்டது.
நேற்று மதியம் அந்த மலைப்பாம்பு வாய்க்காலின் ஓரமாக தண்ணீரில் கிடப்பதை பொதுமக்கள் பார்த்தனர். அந்த மலைப்பாம்பு 2 கோழிகளை விழுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர் ரமேஷ், சிறப்பு நிலைய அலுவலர்கள் ஜெயரத்னகுமார், ஜெயபிரகாஷ் பாபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் கடையநல்லூர் வனச்சரகம் ஆய்க்குடி வனக்காப்பாளர் அய்யப்பனிடம் மலைப்பாம்பை ஒப்படைத்து வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.