திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 1 ஆண்டு ஆகியும் நகராட்சிக்கு தேவையான அதிகாரிகள் இல்லை. மேலும் அங்கு நிரந்தர கமிஷனரும் நியமனம் பொறுப்பேற்கவில்லை. இதனால் புதிய வரி, மக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, தார்சாலை என எந்தவித பணிகளும் முறையாக செய்து தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய வரி போடுவது, பெயர் மாற்றம் ஆகியவை தாமதம் செய்யப்படுவதாக புகார் தெரிவித்து, திருமுருகன்பூண்டி நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், தேவராஜ், பார்வதி, மார்க்சிஸ்டு ஒன்றிய உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.