மண்டை ஓடு, எலும்புகளை வைத்து பூஜை செய்து விட்டு திருட்டில் ஈடுபட்டவர் கைது

மண்டை ஓடு வைத்து மாந்திரீக பூஜை செய்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-27 13:37 GMT

குடியாத்தம்

மண்டை ஓடு வைத்து மாந்திரீக பூஜை செய்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு விபூதி, குங்குமத்தை தூவிவிட்டு 2 வருடங்களாக கைவரிைச காட்டி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர் சம்பவங்கள்

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர் கதவு உள்ளிட்ட இடங்களில் குங்குமம் மற்றும் விபூதியை தூவி விட்டு தலைமறைவாகி வந்தார். இந்த சம்பவங்களில் போலீசார் துப்பு துலக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

குடியாத்தம் ஜி.பி.எம். தெருவில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் குமார் அலுவலகத்தில் ரூ.18 ஆயிரம் திருடப்பட்டது.

மேலும் தங்கள ராமசாமி தெருவில் கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் பூட்டை உடைத்து ரூ.58 ஆயிரம், காட்பாடி ரோட்டில் நிதி நிறுவனத்தில் பூட்டை உடைத்து ரூ.12 ஆயிரம் உள்பட 2 ஆண்டுகளில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பல வீடுகளில் வெள்ளி, பித்தளை பூஜை சாமான்கள் உள்ளிட்டவையும் திருட்டு போயிருந்தன.

கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஒரு நபர் ஹெல்மெட் அணிந்து வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தநபரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட நபர் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைக்கவே தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து குடியாத்தம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் மதுராம்பிகை நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் நேதாஜி (வயது 38) என்பதும் எர்த்தாங்கல்புதூர் பகுதியில் குடியிருப்பதும் ெதரியவந்தது.

மாந்திரீகம்

கடந்த 2 வருடங்களாக திருட்டு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி பகலில் பூட்டிய கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் அவர் திருட்டில் ஈடுபட்டுள்ளார். திருடிய பணத்தில் ரூ.5 லட்சம் செலவு செய்து பெரம்பலூர் பகுதியில் மாந்திரீகம் கற்றுக் கொண்டதாகவும் கடந்த 2 வருடங்களாக வீட்டிலேயே வைத்து மாந்திரீகம் செய்வதாகவும் திருட்டுக்கு செல்லும் முன் வீட்டில் மண்டைஓடு, எலும்புகளுக்கு சிறப்பு பூஜை செய்து அதன் பின்னரே திருட்டுக்கு சென்றதாகவும், திருட்டு முடிந்த பின் விபூதி, குங்குமம் தூவி விட்டு எலுமிச்சம் பழத்தை அங்கே போட்டுவிட்டு வருவது வழக்கம் எனவும் அவர் கூறினார்.திருடிய பணத்தில் ஜாலியாக இருந்ததோடு அந்த பணத்தில் பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார்.

கைது

இதனையடுத்து நேதாஜியை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் லேப்டாப், பிரிட்ஜ், மின்விசிறி பித்தளை சாமான்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்