ஒப்பந்ததாரர்கள் இடையே தள்ளுமுள்ளு

பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-28 16:42 GMT

பழனியில், ரூ.10 கோடி மதிப்பில் குளம் தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட 8 பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணியை மேற்கொள்வதற்கான பொது ஏலம், பழனி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாலை 3 மணியுடன், டெண்டர் பெட்டியில் ஒப்பந்த படிவம் போடுவது கடைசி நேரம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பழனி, ஒட்டன்சத்திரம் மட்டுமின்றி சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் அங்கு வந்தனர்.

அப்போது வெளியூர் ஒப்பந்ததாரர்கள் வைத்திருந்த டெண்டர் படிவங்களை, உள்ளூர் ஒப்பந்ததாரர்களின் ஆதரவாளர்கள் பறித்து சென்றனர். இதனால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே வெளியூர் ஒப்பந்ததாரர்கள் வைத்திருந்த படிவங்களை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பழனி-திண்டுக்கல் சாலையில் மறியல் நடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர். அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஒப்பந்ததாரர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த மாதம் நடந்த ஏலத்தின்போது மோதல் ஏற்பட்டு கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்