மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமில் தள்ளு-முள்ளு

திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-23 12:56 GMT

திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தள்ளு-முள்ளு

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அவர்களது காப்பாளர்களுடன் வந்து கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்தனர். விண்ணப்பதாரர்களுக்கு காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்யும் இடங்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டதால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதனால் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும் அலுவலர்கள் செய்வது அறியாமல் தவித்தனர். அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரும் விண்ணப்பதாரர்களிடம் வரிசையாக வரும்படி வலியுறுத்தினர்.

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

ஆனால் அவர்கள் போலீசாரின் பேச்சையும் கேட்காமல் ஒருவரை ஒருவர் முண்டியடித்த படியே வந்தனர். இதனால் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் இடத்தில் இருந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதி அடைந்தனர்.

ஒரு கட்டத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும் அலுவலர்கள் அங்கிருந்து எழுந்து சென்றனர். பின்னர் அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்களை வரிசைப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

வாரந்தோறும் நடைபெறும் இந்த முகாமில் நாளுக்கு நாள் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே, மாற்றுத் திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தாலுகா வாரியாக முகாம் நடத்த மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்