தூய்மை பணி உறுதிமொழி ஏற்பு
சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணி உறுதிமொழி ஏற்பு
சுரண்டை:
சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் தூய்மை பணிக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு ஊர்வலம் நடந்தது. நெல்லை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் மற்றும் நகராட்சி ஆணையாளர் பாரிஜான் ஆலோசனையின் படி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களிடையே பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு, தூய்மையை பேண உறுதிமொழி ஆகியவை நடந்தது.
தொடர்ந்து வியாபாரிகள் மற்றும் சமுதாய மேம்பாட்டு சங்க உறுப்பினர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து உணர்திறன் பயிற்சி அளித்து குப்பை குவியலை அகற்றும் பணி நடந்தது. நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸ்சலன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மண்புழு உரம், வின்ட்ரோ முறையில் மக்கும் குப்பை மூலம் கலவை உரம் தயாரித்தல், மக்காத குப்பை தரம் பிரித்தல், இயற்கை உரம் மூலம் மரக்கன்றுகள் வளர்த்தல் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், வார்டு கவுன்சிலர்கள், வியாபாரிகள், சமுதாய மேம்பாட்டு சங்க உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள், எஸ்.ஆர்.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், மஸ்தூர் பணியாளர்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.