சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க வேண்டும்

கடலூர் மாநகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க வேண்டும் சமூக சட்ட பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

Update: 2023-06-13 18:45 GMT

கடலூர்

தமிழ்நாடு சமூக சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்க மாநில ஆலோசனை கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வக்கீல் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில சட்ட ஆலோசனை குழு தலைவர் வக்கீல் சிவகுருநாதன், மாநில சட்ட ஆலோசகர் அரசு வக்கீல் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் இயங்கும் கெமிக்கல் நிறுவனங்கள் வெளியிடும் வாயுக்களாலும், நச்சு கழிவுகளாலும் நிலத்தடி நீர் மாசடைகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. எனவே கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கெமிக்கல் நிறுவனங்களை மூட வேண்டும். கடலூர் மாநகரில் கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதனால் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும். ரூ.42 கோடி ஒதுக்கியும் 6 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ள வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை, பருவமழை தொடங்குவதற்குள் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கடலூர் மாவட்ட பொருளாளராக கோண்டூரை சேர்ந்த பாலமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் மாநில அமைப்பாளர் விமல், ரகு, கோகுல், மாவட்ட நிர்வாகிகள் ஞானப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்