பழனி வையாபுரிகுளத்தை தூய்மைப்படுத்தும் பணி

பழனி நகரின் மையப்பகுதியில், வையாபுரிகுளத்தை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2023-03-11 15:17 GMT

பழனி வையாபுரிகுளம்

பழனி நகரின் மையப்பகுதியில் வையாபுரிகுளம் உள்ளது. சுமார் 294 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்த குளம். இதன் மூலம் பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பல ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் பழனி நகரின் நிலத்தடி நீர்மட்டம் உயர இந்த குளம் ஆதாரமாக திகழ்கிறது. வரதமாநதி அணை, பாலாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் இக்குளம் நிரம்புகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குளத்தில் புனித நீராடி விட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படி அல்ல.

கழிவுநீர் சங்கமம்

பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த குளம், தற்போது கழிவுநீர் சங்கமிக்கும் இடமாக மாறி விட்டது. இதனால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே வையாபுரிகுளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் வையாபுரிகுளத்தை சீரமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், குளத்தை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வையாபுரிகுளத்தை முதற்கட்டமாக தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. பழனி அடிவாரம் பாளையம் பகுதியில் இருந்து இந்த பணி தொடங்கப்பட்டது.

குப்பைகள் அகற்றம்

பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, தாசில்தார் சசிகுமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தற்போது கரையோரத்தில் தேங்கி கிடந்த குப்பைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் குளத்தின் மேடான பகுதியை தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

இனிவருங்காலத்தில், குளத்தில் கழிவுநீர் கலக்காமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்தார். பழனி வையாபுரிகுளம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்