திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே செண்பகம்பேட்டை கிராமத்தில் செகுட்டு அய்யனார் மற்றும் பனிச்சாருடைய அய்யனார் கோவில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் பிடி மண் கொடுக்கப்பட்டு குதிரை தயார் செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் கண்மாய் பகுதியில் தயார் செய்யப்பட்டிருந்த இரண்டு பெரிய குதிரை, ஒரு யானை மற்றும் நேர்த்திக்கடன் வேண்டுதலுக்காக செய்யப்பட்டிருந்த மொத்தம் 105 குதிரைகளுக்கு கிராமத்தினர் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் மாலை வேட்டி, துண்டு அணிவித்தனர். பின்னர் புரவிகளை எடுத்து வந்து ஊருக்குள் உள்ள புரவி பொட்டலில் வைத்தனர். பின்னர் நேற்று மாலை பொட்டலில் இருந்து புரவி வாண வேடிக்கைகளுடன் புறப்பட்டு கோவிலை சென்றடைந்தது. இதில் குதிரை ஆட்டம், ஒட்டக ஆட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் செண்பகம்பேட்டை, இரணியூர், முத்துவடுகநாதபுரம், விராமதி, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட கிராமத்தினர் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.