நீலகிரி பூண்டு கிலோ ரூ.500-க்கு கொள்முதல்

விதை பூண்டு வாங்க வெளிமாநில வியாபாரிகள் படையெடுத்து வருவதால், மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் நீலகிரி பூண்டு கிலோ ரூ.500-க்கு கொள்முதல் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2023-07-31 23:15 GMT

கோத்தகிரி

விதை பூண்டு வாங்க வெளிமாநில வியாபாரிகள் படையெடுத்து வருவதால், மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் நீலகிரி பூண்டு கிலோ ரூ.500-க்கு கொள்முதல் விலை அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பூண்டு விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் விளைநிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

நீலகிரியில் விளையும் பூண்டு அதிக காரத்தன்மை மற்றும் மருத்துவ குணம் உடையது. இதனால் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் போகமாக கடந்த ஜனவரி மாதமும், 2-ம் போகமாக ஏப்ரல் மாதத்திலும் பூண்டு பயிரிட்டனர். கடந்த சில வாரங்களாக போதுமான மழை பெய்தது. இதனால் பூண்டு பயிர்கள் செழித்து வளர்ந்தன.

விவசாயிகளுக்கு லாபம்

கடந்த ஆண்டு பூண்டு கிலோ ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் பூண்டு பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், முதல் போகத்தில் கிலோவுக்கு ரூ.160 முதல் ரூ.200 வரை கொள்முதல் விலை கிடைத்தது. இதையடுத்து பூண்டு கொள்முதல் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரூ.500-க்கு கொள்முதல்

இதுகுறித்து கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறியதாவது:-

முதல் போகத்தில் அறுவடை செய்யப்படும் நீலகிரி பூண்டு சமையல் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. 2-ம் போகத்தில் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. நீலகிரி பூண்டுகளை விதைக்காக பெரும்பாலும் பயன்படுத்துவதால், 2-ம் போகத்தில் அறுவடை செய்யப்படும் பூண்டு விதைகளை இந்தியா முழுவதிலும் இருந்து விவசாயிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் நீலகிரி பூண்டு உச்சபட்சமாக ரூ.500-க்கு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ரூ.600-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. சைனா ரக பூண்டு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்யபடுகிறது. இமாச்சல பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விதை வாங்க ஏராளமான வியாபாரிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு வருவதால் நீலகிரி பூண்டின் கொள்முதல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்