பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல்; விவசாயிகள் கவலை
பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பச்சை மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பச்சை மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரிப்பு காரணமாக பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் பச்சை மிளகாய் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளால் பச்சை மிளகாய் விளைச்சல் கடும் பாதிப்புக்குள்ளானது. இந்தநிலையில் தற்போது பச்சை மிளகாய் அதிக விளைச்சல் காரணமாக தற்போது கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இதனை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.