300 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு
நாமக்கல் மாவட்டத்தில் 300 டன் உளுந்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
300 டன் உளுந்து கொள்முதல்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகள் விளைவித்த உளுந்து விளைபொருள் மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 300 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ உளுந்து விலை ரூ.66 என கொள்முதல் செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டம் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட உள்ளது.
வங்கி கணக்கில் வரவு
இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
உளுந்து கொள்முதல் 29.5.2023 வரையிலான காலம் வரை நடைபெற உள்ளது. உளுந்து விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.