கொப்பரை தேங்காய் கொள்முதல்
திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
கொப்பரை தேங்காய்
திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.ஜோதிராமன் வரவேற்றார். கொப்பரை தேங்காய் கொள்முதலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், திருப்பத்தூர் தொகுதி அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து பேசினார்.
விலை ஆதரவு திட்டம்
அப்போது இன்று 250 கிலோ கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி அதிகமாக இருக்கின்றது, உற்பத்தி அதிகமாக இருந்தாலும் சரி, விலை வீழ்ச்சி அடைந்தாலும், அப்பொழுது ஆதரவு விலையை அறிவிக்கின்ற பொழுது விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
அண்மைக் காலமாக கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவாக உள்ளது. விலைகளின் ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்திட கொப்பரைத் தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைத்திட 2023-ம் ஆண்டுக்கான விலை ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தரமான கொப்பரை தேங்காய் இருந்தால் கிலோ ஒன்றுக்கு ரூ.112 வரைக்கும் கொடுக்க முடியும்.
25 மெட்ரிக் டன்
அதன்படி அரவை கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என்ற விலையை கொடுத்து கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 15 மெட்ரிக் டன்னும், வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 10 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 25 மெட்ரிக் டன்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குனர் சிவக்குமார், கலெக்்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன், வேளாண் விற்பனை குழு செயலாளர் கண்ணன், வேளாண் அலுவலர் லதா, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கண்காணிப்பாளர் திருமகள் நன்றி கூறினார்.