பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 72,745 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல்

பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 72,745 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Update: 2023-06-28 00:30 GMT


பொள்ளாச்சி


பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 72,745 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


கொப்பரை தேங்காய் கொள்முதல்


பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை குறைவாக உள்ளது. இதன் காரணமாக அரசு கொள்முதல் மையங்களை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


இதை தொடர்ந்து பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதலை கண்காணிப்பாளர் வாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் அவர் கூறியதாவது:-


2479 விவசாாயிகள் பயன்


தற்போது வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை கடுமையாக சரிந்து உள்ளது. பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் வரை கொள்முதல் நடக்கிறது. தற்போது அரவை கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.117.50-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.


ஒரு ஏக்கருக்கு 291 கிலோ கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 2479 விவசாயிகளிடம் இருந்து ரூ.40 கோடி மதிப்புள்ள 72,745 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்