குறுவை பருவத்தில் 12,741 டன் நெல் கொள்முதல்

நாகை மாவட்டத்தில் இதுவரை குறுவை பருவத்திற்கு 12,741 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.

Update: 2022-10-03 18:45 GMT

வேளாங்கண்ணி

நாகை மாவட்டத்தில் இதுவரை குறுவை பருவத்திற்கு 12,741 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.

வேளாண்மை துறை இயக்குனர் ஆய்வு

நாகை மாவட்டம் திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் வேளாண்மை துறை இயக்குனர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக திருக்குவளை வட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட கட்டுமான பணிகளையும், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் திருவாய்மூர் கிராமத்தில் எந்திர நடவு மூலம் குறுவை சாகுபடி செய்ததையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது:-

138 டன் நெல் விதைகள் இருப்பு

நாகை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 17,196 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 4,078 எக்டேரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 65 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 39,601 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சம்பா மற்றும் தாளடிக்கு தேவையான நீண்டகால, மத்திய கால மற்றும் குறுகிய கால நெல் விதை ரகங்கள் 583.91 டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 138 டன் நெல் விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

12,741 டன் நெல் கொள்முதல்

மேலும் நடப்பு பருவத்திற்கு 1,584 டன் யூரியா, 595 டன் டி.ஏ.பி, 435 டன் பொட்டாஷ் மற்றும் 1,155 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் குறுவைப்பருவத்திற்கு 93 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 2,710 விவசாயிகளிடமிருந்து 12,741 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எட்டுக்குடியில்147 டன்னும், திருக்குவளையில் 184 டன்னும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்