பஸ்கூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்களுக்கு நூதன தண்டனை '7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவு'

பஸ்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2023-07-25 21:46 GMT

பெரம்பூர்,

சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் தடம் எண் 56-ஏ கொண்ட பஸ் கடந்த 22-ந்தேதி வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றது.

அப்போது பஸ்சை நிறுத்திய வண்ணாரப்பேட்டை தியாகராஜ கல்லூரியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ் கூரை மீது ஏறிக்கொண்டு தியாகராய கல்லூரிக்கு ஜே! தியாகராய கல்லூரி புள்ளிங்கோ ஜே! என முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

ஆபத்தான பஸ் பயணத்தை மேற்கொண்ட இவர்களால் பயணிகள் ஒருவித அச்சத்துடன் பயணம் மேற்கொண்டனர். ஒரு கட்டத்தில் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கல்லூரி மாணவர்கள் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

நூதன தண்டனை

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கூரையின் மீது பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தியதாக தியாகராஜா கல்லூரியில் படிக்கும் பி.காம் 2-ம் ஆண்டு மாணவர்களான கோகுலகிருஷ்ணன் (வயது 19), பிரவீன் (19), ஜோசப் (19), பிரவீன் குமார் (19) ஆகிய 4 பேரையும் பிடித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி முன்னிலையில் ஒப்படைத்தனர்.

அப்போது தவறு செய்த 4 பேரையும் போக்குவரத்து போலீசார் உடன் இணைந்து காலை, மாலை என தொடர்ந்து 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டுமென நூதன முறையில் அவர் தண்டனை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, மாணவர்கள் மூலக்கொத்தளம் தங்க சாலை பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்