திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நல்லூர் பொன்முத்துநகர் குடியிருப்போர் நலசங்கத்தினர் கூட்ட அரங்குக்கு முன் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடியிருப்பு அனுமதி பெற்று அறக்கட்டளை என்ற பெயரில் வணிக வளாகம் கட்ட அனுமதி கோரி விதிகளுக்கு புறம்பாக அனுமதி பெற்றுள்ளனர். பின்னர் கோவில் கட்டி வருகிறார்கள். தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற மதத்தினர் வழிபாட்டு தலங்கள் எதுவும் கட்ட குடியிருப்போர் சங்கத்தினர் அனுமதிக்கவில்லை. தற்போது கோவில் கட்டுவதால் மதம் சார்ந்த பிரச்சினை ஏற்பட வாய்ப்பாகும். இதுகுறித்து ஆய்வு நடத்தி கோவில் கட்டிடத்தை அகற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும்' என்று கூறியுள்ளனர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதற்கேற்ப தர்ணாவை கைவிட்டு கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.
பின்பு மாலை திருப்பூர் நல்லூர் 3-ம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கோவிலை முழுமையாக தடை செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக 3-ம் மண்டல அலுவலகம் முன்பாக சிலிண்டர், அடுப்பு உள்ளிட்ட பொருட்களுடன் தர்ணா போராட்டத்தில் பொன் முத்து நகர் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டனர்.