புதுக்கோட்டை நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவதி

புதுக்கோட்டை நகராட்சி ஊழியர்களுக்கு கடந்த ஜூன் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2022-07-29 19:14 GMT

புதுக்கோட்டை நகராட்சி

புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு கண்ட பழமையான நகராட்சியாகும். இந்த நகராட்சியில் அலுவலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் 80-க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு கடந்த ஜூன் மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''புதுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் அனைவருக்கும் மாதந்தோறும் 1-ந் தேதி அவர்களது வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும். 1-ந் தேதி தவறினால் 5-ந் தேதிக்குள் சம்பளம் வந்துவிடும். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பளம் வினியோகிக்கப்படாமல் இருந்தது. அதன்பின் நிலைமை சீரானது.

கடன்வாங்கும் நிலைமை

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்திற்கான சம்பளம் 80-க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் சம்பளம் போடப்பட்டுள்ளது. சம்பளம் இதுவரை போடப்படாததால் செலவுக்கு சற்று சிரமமாக உள்ளது. குடும்பத்திற்கான அத்தியாவசிய செலவு செய்வதற்கு கூட பணம் இல்லாத சூழலால் அவதிப்படுகின்றனர். வெளியில் தெரிந்த நபர்களிடம் கடன் தான் வாங்க வேண்டி உள்ளது.

ஜூலை மாதம் கடைசி தேதியை நெருங்கி விட்டது. நிர்வாகத்திடம் கேட்டால் சம்பளம் போடப்படும் என்கின்றனர். வெளியிலும் யாரிடமும் சொல்ல முடியவில்லை. எனவே நிலுவை சம்பளத்தை அலுவலர்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

அதிகாரி விளக்கம்

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ''நகராட்சி அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. போதுமான நிதி இல்லாததால் சிலருக்கு சம்பளம் போடப்படவில்லை. சொத்து வரி உள்ளிட்டவை வசூலிக்கப்படாமல் உள்ளதால் வருவாய் இல்லாமல் உள்ளது. இதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொஞ்சம் பணம் வசூலாகி வரும் போது சிலருக்கு சம்பளம் போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (அதாவது நேற்று) சிலருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ளவர்களுக்கும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்