புதுக்கோட்டை: மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு
புதுக்கோட்டை, ராயவரம் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுபிடி வீரர் மாடு முட்டி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அதிக அளவில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று திருமயம் அருகே கே.ராயபுரம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. இதனை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
இதற்கிடையே காளையை அடக்க முயன்றபோது புதுவயல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 50) என்பரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கியது. இதில் அவர் குடல் சரிந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். உயிரிழந்த கணேசன் புதுவயலை சேர்ந்தவர்.
காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழந்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.