புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி மறுப்பு

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2022-12-20 18:27 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்தநிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (புதன்கிழமை) முதல் மறுஅறிவிப்பு வரும் வரை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதேபோல் பொன்னகரம், வடக்கு அம்மாபட்டினம் ஆதிபட்டினம், புதுக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்