தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை-புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு

தொழிலாளியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-03-31 18:53 GMT

தொழிலாளி கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் வாசுகிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (30). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் ஊரில் ஒருவர் இறப்பு தொடர்பாக பதாகை வைத்ததில் சந்தோஷ் செலவு செய்துள்ளார். இதில் பாதி பணம் கணேசன் கொடுப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அந்த பணத்தை கேட்ட போது அவர் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந் தேதி இவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த சந்தோஷ், கணேசனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி அப்துல் காதர் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சந்தோசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சிறையில் தண்டனை காலத்தில் அவர் பணியாற்றும் வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் 20 சதவீதத்தை கொலையான கணேசனின் மனைவிக்கு வழங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட சந்தோஷை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்