புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-08 18:36 GMT

தீக்குளிக்க முயன்ற பெண்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக குடுமியான்மலை மேலப்பாறை பகுதியை சேர்ந்த செல்வராஜின் மனைவி ராஜகுமாரி (வயது 47) வந்தார். அப்போது அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் நிறுத்துமிடம் அருகே திடீரென மண்எண்ணெயை பாட்டிலில் இருந்து தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராஜகுமாரியை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும் அவரது உடல் மீது தண்ணீரை ஊற்றினர்.

சொத்து பிரச்சினை தொடர்பாக தனது கணவரின் சகோதரர்கள் மிரட்டுவதாக கூறியும், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரை அதிகாரிகளிடம் போலீசார் அழைத்து சென்று மனு கொடுக்க வைத்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பானது.

தர்ணா

சங்கம்விடுதியில் முனியாண்டவர் கோவில் திருவிழா ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஒரு தரப்பினர் பெயர் மட்டும் பயன்படுத்தப்படுவதாகவும், ஊர் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி அப்பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஏம்பல் பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அமைப்புசாரா தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சுடர்மணி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர். இதேபோல் மற்றொரு மனுவில் மீமிசல் சாலை சாய்பாபா கோவில் அருகில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 402 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், செவித்திறன் குறைபாடுடைய மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்ளும் வகையில் 75 பேருக்கு தலா ரூ.13,350 வீதம் தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன், ரூ.85 ஆயிரம் மதிப்புடைய இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், ஒரு நபருக்கும் மற்றும் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 5 திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்கிட தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான மானியத் தொகைக்கான ஆணைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்