புதூர்நாடு ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில்மலைவாழ் மக்களுக்கான பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு

புதூர்நாடு ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாட்டிலேயே முதல்முறையாக மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-25 18:37 GMT

புதூர்நாடு ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாட்டிலேயே முதல்முறையாக மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர்நாடு மலை அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அகில இந்திய அளவில் மலைவாழ் மக்களுக்கான முதல் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு கட்டிடம் ரூ.28.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டிடமும், திருப்பத்தூர் நகரில் ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையமும், நாட்டறம்பள்ளியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மண் பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மொத்தம் ரூ.2 கோடியே 1 லட்சத்து 84 மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதூர்நாடு பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் திட்டங்களை தொடங்கி வைத்து 4 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட புதூர்நாடு மலைப்பகுதியில் உள்ள 32 கிராமங்களில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். புதூர் நாடு மலைப்பகுதியில் புதூர் நாட்டில் 30 படுக்கைகள் கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், புங்கம்பட்டு நாட்டில் ஒரு கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், மேலும் நெல்லிவாசல் நாடு, புலியூர், சேர்க்கானூர் ஆகிய பகுதிகளில் 3 துணை சுகாதார நிலையங்களும் அமைந்துள்ளன. தினமும் 150 முதல் 200 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுக்கிறது.

பிரசவங்கள்

புதூர் நாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் 30 பிரசவங்கள் நிகிழ்கின்றன. புதூர் நாட்டில் தயார் நிலையில் இரண்டு 108 ஆம்புலன்சுகள் எப்பொழுதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அகில இந்திய அளவில், மலைவாழ் மக்களுக்கான முதல் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவு ரூ.28.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரே நேரத்தில் 6 பச்சிளங்குழந்தைகளை பராமரித்து, சிகிச்சை அளிக்க முடியும். இதனால், இப்பகுதி மக்கள் திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மருத்துவமனைகளுக்கு செல்லாமல் இங்கேயே சிகிச்சை பெற முடியும்.

சிங்காரப்பேட்டை சாலையில் தொடங்கி, தரைப்பகுதியில் உள்ள மட்றப்பள்ளி, மேற்கத்தியனூர் வழியே ரூ.6.26 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வில்வநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர்.இ.வளர்மதி, திட்ட இயக்குனர்கள் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)செல்வராசு, மாவட்ட ஊராட்சி தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால் வளத்தலைவர் எஸ்.இராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜியா அருணாசலம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யவாணி வில்வம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் துக்கண், பிருந்தாவதி வைகுந்தராவ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அய்யப்பன், ராஜேஷ்குமார், அலமேலு செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தாசில்தார் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்