புதர் மண்டி கிடக்கும் அரசு கலைக்கல்லூரி வளாகம்

தேனி அருகே அரசு கலைக்கல்லூரி வளாகம் புதர் மண்டி கிடக்கிறது. அடிப்படை வசதிக்காக மாணவ-மாணவிகள் ஏங்குகின்றனர்.

Update: 2022-09-28 15:46 GMT

அரசு கலைக்கல்லூரி

தேனி அருகே வீரபாண்டியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

குறிப்பாக கல்லூரிக்கு வருகிற மாணவர்களுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். கலைக்கல்லூரி அருகே அரசு சட்டக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. அங்கு படிக்கிற மாணவ-மாணவிகளும் பஸ் வசதியின்றி பரிதவிக்கின்றனர்.

படிக்கட்டில் பயணம்

தினமும் காலை 8.45 மணிக்கு போடியில் இருந்து ஒரு பஸ்சும், 9 மணிக்கு தேனியில் இருந்து ஒரு பஸ்சும், கடமலைக்குண்டுவில் இருந்து ஒரு பஸ்சும் இயக்கப்படுகின்றன. ஆனால் கல்லூரிகளுக்கு வருகை தரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

எனவே பஸ்களின் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். கர்ணம் தப்பினால் மரணம் என்று சொல்லும் அளவுக்கு மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஒரு சில நாட்களில் அரசு பஸ்கள் வராமல் போய் விடுகிறது. இதனால் உப்பார்ப்பட்டி விலக்கில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற குடிநீர்

அரசு கலைக்கல்லூரியை பொறுத்தவரை சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக மாணவ-மாணவிகள் புகார் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி கம்ப்யூட்டர் பாடப்பிரிவில் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

ஆனால் வெறும் 10 கம்ப்யூட்டர்கள் மட்டுமே உள்ளன. இதேபோல் பிறதுறைகளிலும் உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது. இதுஒருபுறம் இருக்க, கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.

புதர் மண்டிய வளாகம்

இதேபோல் கல்லூரியில், குறைந்த எண்ணிக்கையிலேயே துப்புரவு பணியாளர்களும் பணிபுரிகின்றனர். இதன் காரணமாக கல்லூரி வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. செடி, கொடிகள் அடர்ந்து படந்து காணப்படுகின்றன. மேலும் விளையாட்டு மைதானமும் அங்கு இல்லை.அடிப்படை வசதிக்காக கல்லூரி மாணவ- மாணவிகள் ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்