பி.யூ.சி. படித்த முதியவரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்: தேர்வுக்குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி பி.யூ.சி. படித்த 67 வயது முதியவரின் கோரிக்கையை பரிசீலிக்கவேண்டும் என்று மருத்துவ தேர்வுக்குழுவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், பெருங்குடியைச் சேர்ந்த முனுசாமி (வயது 67) என்ற முதியவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த இடஒதுக்கீட்டின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க என்னை அனுமதிக்கும்படி விண்ணப்பம் கொடுத்தும் மருத்துவ தேர்வுக்குழுவுக்கு பரிசீலிக்கவில்லை. அதனால், என் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
பி.யூ.சி. படிப்பு
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''பி.யு.சி. படிப்பில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் உள்ளடக்கிய நேச்சுரல் சயின்ஸ் என்ற படிப்பை மனுதாரர் படித்துள்ளார். நீட் தேர்வில் 720-க்கு 408 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மனுதாரரை பரிசீலிக்கவில்லை என்றால் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி தேர்வுக்குழுவுக்கு உத்தரவிடவேண்டும்'' என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்வுக்குழு தரப்பில் ஆஜரான வக்கீல், ''மனுதாரர் பி.யூ.சி. படித்துள்ளாரே தவிர, பிளஸ்-2 படிக்கவில்லை. இதன் காரணமாக அவரை கலந்தாய்வில் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
என்ன தகுதி?
அதற்கு நீதிபதிகள், நீட் தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகுதிகள் என்ன? என்று கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த தேசிய மருத்துவ ஆணையம் தரப்பு வக்கீல், பிளஸ்-2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது உச்சவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. நீட் தேர்வுக்கான தகுதி விதிகளே, மருத்துவ படிப்புக்கும் பொருந்தும்'' என்று விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ''முதல் சுற்று கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், 2-வது சுற்று கலந்தாய்வுக்கு முன்பு, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்கவேண்டும் என மருத்துவ தேர்வுக்குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து நீதிபதிகள் முடித்து வைத்தனர்.