சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வேளச்சேரி தொகுதியில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

Update: 2023-01-05 21:46 GMT

சென்னை,

2023-ம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1.1.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 8-ந்தேதி வரை நடந்தது.

இந்த நாட்களில் பொதுமக்களிடம் இருந்து இதுதொடர்பாக உரிய படிவங்கள் பெறப்பட்ட நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலரால் அவை ஆய்வுசெய்த பின்னர், சட்டமன்ற தொகுதியினை சேர்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஏற்கப்பட்ட படிவங்கள் அடிப்படையில் 2023-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் தயார்செய்யப்பட்டு, நேற்று வெளியிடப்பட்டன.

16 சட்டமன்ற தொகுதிகள்

அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது. சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலரும், மாநகராட்சி துணை ஆணையாளருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) குலாம் ஜிலானி பாபா முன்னிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான தி.மு.க. சார்பில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் என்.மருதுகணேஷ், மாநில சட்டத்துறை துணை செயலாளர் கே.சந்துரு, அ.தி.மு.க. சார்பில் வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டத்துறை தலைவர் சந்திரமோகன், பா.ஜ.க. சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

38,82,277 வாக்காளர்கள்

நேற்று வெளியிடப்பட்டு இருக்கும் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலின் படி, 19 லட்சத்து 9 ஆயிரத்து 512 ஆண்கள், 19 ஆயிரத்து 71 ஆயிரத்து 653 பெண்கள், 1,112 மற்றவை என மொத்தம் 38 லட்சத்து 82 ஆயிரத்து 277 வாக்காளர்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுகையில் 10 ஆயிரத்து 180 வாக்காளர்கள் குறைவு. சதவீதத்தில் பார்க்கும்போது, 0.26 ஆகும்.

இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில், குறைந்த வாக்காளர் எண்ணிக்கை உடைய தொகுதியாக துறைமுகம் தொகுதியும் (1,70,125), அதிகபட்ச வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதியாக வேளச்சேரி தொகுதியும் (3,07,831) இருக்கின்றன.

பொதுமக்கள் பார்க்கலாம்

இதுகுறித்து சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலரும், மாநகராட்சி துணை ஆணையாளருமான எம்.எஸ்.பிரசாந்த் கூறுகையில், 'வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். இதுதவிர www.elections.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் பார்க்கலாம்' என்றார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளான கராத்தே தியாகராஜன் (பா.ஜ.க.), மருது கணேஷ் (தி.மு.க.) உள்பட சிலர் பெயர் நீக்கம் செய்தவர்களின் பட்டியலை முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டதோடு, ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கூட்டத்தில் கருத்துகள் முறையாக கேட்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்