வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வாக்குச்சாவடி இடமாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-29 19:28 GMT

திருச்சி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வாக்குச்சாவடி இடமாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023-ந்தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு 2023-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. அதற்காக முதற்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிபட்டியல் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வைத்தியநாதன், தேர்தல் தாசில்தார் முத்துசாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

2,543 வாக்குச்சாவடிகள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் விவரம் வருமாறு:-

மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,83,298 பேர், வாக்குச்சாவடி எண்ணிக்கை 324, ஸ்ரீரங்கம் மொத்த வாக்காளர்கள் 3,06,691 பேர், வாக்குச்சாவடி 339, திருச்சி மேற்கு மொத்த வாக்காளர்கள் 2,66,706 பேர், வாக்குச்சாவடி 270, திருச்சி கிழக்கு மொத்த வாக்காளர்கள் 2,51,347 பேர், வாக்குச்சாவடி 255, திருவெறும்பூர் மொத்த வாக்காளர்கள் 2,94,409 பேர், வாக்குச்சாவடி 296, லால்குடி மொத்த வாக்காளர்கள் 2,16,899 பேர், வாக்குச்சாவடி 249, மண்ணச்சநல்லூர் மொத்த வாக்காளர்கள் 2,45,121 பேர், வாக்குச்சாவடி 273, முசிறி மொத்த வாக்காளர்கள் 2,28,081 பேர், வாக்குச்சாவடி 260, துறையூர் (தனி) தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,22,749 பேர், வாக்குச்சாவடி 277 ஆகும்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 23,15,301 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இவர்களுக்காக 2,543 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இடமாற்றம்

இந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குச்சாவடி இட மாற்றம், பெயர் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் மாவட்டத்தில் 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 12 வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்தல் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அவற்றை வருகிற 7-ந்தேதி முதல் 14-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் (தாலுகா அலுவலகம்), வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் (ஆர்.டி.ஓ. அலுவலகம்) மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக கோரிக்கைகள் அளிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பொதுமக்கள், குடியிருப்பு சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பிற வழிகளில் வரப்பெறும் மனுக்களை பரிசீலனை செய்து இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியல் வருகிற நவம்பர் மாதம் 9-ந்தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்