பட்டாவை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறையினர் வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-20 18:56 GMT

காத்திருப்பு போராட்டம்

கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட மாங்கோட்டை கிராமத்தில் பொது அலுவலகங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி நபர்களுக்கு வருவாய்த்துறையினர் போலியாக வழங்கி உள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் அந்த இடத்தில் அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அனைத்து கட்சி சார்பில் நேற்று மாங்கோட்டை விளக்கு சாலையில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் சொர்ணகுமார் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது ஆலங்குடி போலீசார், வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதற்கிடையே புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் மாங்கோட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. மாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா ரெத்தினம் முன்னிலை வகித்தார்.

அப்போது போலியாக பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பந்தப்பட்ட 3 இடங்களும் தனிநபர்கள் பட்டா பெற்றுள்ளதாக கிராம கணக்கில் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்த கோரிக்கையின் படி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சம்பந்தப்பட்ட இடத்தை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுப ட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்