கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் முன் வர வேண்டும்

வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் முன் வரவேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கேட்டுக்கொண்டார்.

Update: 2022-10-02 17:01 GMT

நாகர்கோவில்:

வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் முன் வரவேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் கேட்டுக்கொண்டார்.

கிராமசபை கூட்டம்

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட ராமன்புதூரில் காந்தியின் 154-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

மழை காலம் தொடங்கி விட்டதால் வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். பருவமழை காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்திடும் பொருட்டு அனைத்து வீடுகள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள், பொது கட்டிடங்கள் போன்ற இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தாழ்வான மற்றும் மழைநீர் தேங்க கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு அவ்விடத்தில் மழைநீர் தேங்காமல் செல்ல வழிவகை செய்தல், பருவமழை தொடங்குவதற்கு முன்பே வாய்க்காலில் உள்ள அடைப்பினை நீக்கி மழைநீர் வழிந்தோடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஏரிகள், பாசன ஏரிகள், குளம், குட்டைகள் போன்றவற்றில் கரைகளை கண்காணித்தல், மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது தரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்.

திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகளில் அமைந்துள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஊரக குடியிருப்பு நிறுவனங்கள் பொது இடங்களில் வரும் கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் சமுதாய உறிஞ்சி குழாய் அமைத்து, நீர் நிலைகளை சுகாதாரமாக பேண வேண்டும்.

குடிநீர் இணைப்பு

ஊராட்சியின் தெரு விளக்குகளை முறையாக பயன்படுத்துதல் அவசியம். ஊராட்சி குக்கிராம பகுதியில் உள்ள குடிநீர் இணைப்பு இல்லாத அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களுக்கும் விரைந்து கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, இணை இயக்குனர் (பொறுப்பு) அவ்வை மீனாட்சி (வேளாண்மை), துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) ஷீலா ஜாண், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், பள்ளம்துறை ஊராட்சித்தலைவர் ஆன்றனி, துணைத்தலைவர் விசாலாட்சி, ஒன்றிய கவுன்சிலர் ஹென்றித் மினி மற்றும் வார்டு உறுப்பினர்கள் சகாய ஆஸ்டின் பிஸ்மி, ரெஜிஸ் மேரி, ஜாண் மேரி, சூசை நாயகம், கோல்டுவின் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்