பொதுமக்கள் சாலை மறியல்
பரதராமியில் வீடு இருப்பவர்களுக்கு அவசு சார்பில்வீட்டுமனை ஒதுக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீட்டுமனை பட்டா
குடியாத்தத்தை அடுத்த பரதராமி இந்திராநகர் பகுதியில் ஆதிதிராவிட நலத் துறை சார்பில் 2018-ஆம் ஆண்டு 18 பேருக்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் வசதியாக இருப்பவர்கள் என்றும், அவர்களுக்கு சொந்தமாக வீடு இருப்பதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார்கள்.
வருவாய்த் துறையினர் அந்த புகார்கள் மீது விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 2018-ஆம் ஆண்டு வீட்டு மனைபட்டா வழங்கப்பட்ட இடத்தில் வருவாய்த்துறை சார்பில் அளந்து உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிக்காக வீட்டு மனைகளை அளக்க வருவாய்த்துறையினர் நேற்று காலையில் வந்தனர்.
சாலை மறியல்
அப்போது இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் திரண்டு, வசதியானவர்களுக்கும், வீடு இருப்பவர்களுக்கும் வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு கட்டிடம் இல்லை, விளையாட்டு மைதானம் இல்லை எனவும், வீடு இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகளை ரத்து செய்து அங்கு அங்கன்வாடி மையம், விளையாட்டு மைதானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி பரதராமி- சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வீட்டு மனையை அளக்க வந்த தாசில்தார்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டிருந்த சிலர் தாசில்தார் ஜீப் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
அவர்களிடம் பரதராமி போலீசார் பேசி, இந்த பிரச்சினையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சுமார் 45 நிமிடம் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல்காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறுகையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். அந்த புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வீட்டு மனை ஒதுக்கீடு செய்தவர்களுக்கு அதனை அளந்து கொடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் பேரில் வீட்டு மனைகள் அளக்கப்பட்டது என்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.