பொதுமக்கள் சாலை மறியல்

திருக்கடையூரில உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-19 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், வளையல்சோழகன், நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், ராவணன்கோட்டகம், கண்ணங்குடி, கிள்ளியூர், சரபோஜிராஜபுரம், சீவகசிந்தாமணி, அபிஷேக கட்டளை, பிச்சைகட்டளை, காலகட்டளை, தாழம்பேட்டை, வேப்பஞ்சேரி, குருவிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படும் போது இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

சிகிச்சை பலனின்றி பெண் சாவு

இந்தநிலையில் பிள்ளபெருமாள் நல்லூரை சேர்ந்த சந்திரசேகர் மனைவி ஜெயந்தி (வயது 50) என்பவர் நேற்று திடீரென மயங்கி விழுந்ததால் அவரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் ஜெயந்தி உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டியதோடு இதனை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, சுகாதாரத் துறை இணை இயக்குனர் குமரகுருபரன், கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்