பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சை அருகே குண்டும், குழியுமான சாலையால் அடிக்கடி விபத்து நடப்பதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-25 20:33 GMT
தஞ்சையை அடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் வசந்த் (வயது 17). இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.‌ இவர் தினமும் பஸ்சில் பள்ளிக்கு வந்து விட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தஞ்சை செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் வயலூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பஸ்சில் சென்ற மாணவர் வசந்த் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

சாலை மறியல்

ஆனால் பஸ் அந்த இடத்தில் நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்ததும் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தஞ்சை-கும்பகோணம் சாலைக்கு திரண்டு வந்து வயலூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. உடனடியாக புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். மேலும் பஸ் நிற்காமல் சென்றதற்கு கண்டனமும் தெரிவித்தனர்.

அதிகாரிகள் சமரசம்

இதையடுத்து புதிய சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது


Tags:    

மேலும் செய்திகள்