குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-14 20:23 GMT

ஆண்டிமடம்:

சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் ரோட்டுத்தெரு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 2019-20-ம் ஆண்டில் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து நீர்த்தேக்கத் தொட்டி வாயிலாக சில நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதன் பிறகு மோட்டார் பழுதடைந்ததால், அதனை பழுது நீக்க கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மோட்டார் பொருத்தப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கோடைகாலத்தில் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகி, பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். பலமுறை இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று திடீரென பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சிலம்பூர்-ஆண்டிமடம் மெயின்ரோட்டில் அழகாபுரம் ரோட்டு தெரு குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதவாறு கயிறு கட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவலறிந்த ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மோட்டாரை பழுது நீக்கி மீண்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்