ஆனைமலையில் பொதுமக்கள் சாலை மறியல்

அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தை கைவிட கோரி ஆனைமலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-25 22:15 GMT

ஆனைமலை

அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தை கைவிட கோரி ஆனைமலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. சில வார்டுகளில் சரியாக குடிநீர் வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து அம்ருத் 2.0 என்ற குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 30 சதவீதம், பேரூராட்சியில் இருந்து 20 சதவீதம் என ரூ.18.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, அதில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என அளவீடு செய்ய மீட்டர் பொருத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22-ந் தேதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், நேற்று கலெக்டர் திட்டம் குறித்து முழு விளக்கம் அளிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்தநிலையில் நேற்று ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டனர். அங்கு கலெக்டர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பொள்ளாச்சி-சேத்துமடை சாலையில் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை

பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, தாசில்தார் ரேணுகாதேவி, போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ஆனைமலை பேரூராட்சிக்கு மத்திய, மாநில அரசின் அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்து முழு விளக்கம் கலெக்டர் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

இதையடுத்து சப்-கலெக்டர் பிரியங்கா, போலீஸ் உதவி சூப்பிரண்டு பிருந்தா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சப்-கலெக்டர் பிரியங்கா கூறும்போது, அம்ருத் 2.0 குடிநீர் திட்டம் குறித்து வருகிற 28-ந் தேதி தாசில்தார் அலுவலகத்தில் முழு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இதில் சப்-கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்று, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். அப்போதும் நம்பிக்கை இல்லை என்றால், இத்திட்டத்தை நிராகரிக்க பரிந்துரை செய்யப்படும் என்றார். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்