குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டை அருகே குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை அருகே குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பலத்தமழை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கன 2 மணி நேரம் வரை மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் ஊராட்சி சாலை நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள பகுதியில் சிறிது தொலைவிற்கு வீடுகள் தாழ்வான நிலையில் உள்ளதால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் குடியிருப்பை கடந்து சாலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
சாலைமறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் தாழ்வான சாலையை அமைத்து குடியிருப்புக்குள் மழைநீர் வருவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலையோரத்தில் குடியிருப்புகளில் அருகே குளம்போல் தேங்கி நின்ற மழை நீரை பொக்லைன் எந்திரம் மூலம் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் தாழ்வான பகுதியாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியபின் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த சாலை மறியலால் அப்பகுதியில் அரை நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.