சாலையில் மரக்கன்றுகளை நட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்
சாலையில் மரக்கன்றுகளை நட்டி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி தெற்கு மண்டலம் 53-வது வார்டு ஆனந்த நகர் பகுதியில் பல வருடங்களாக புதிய சாலை அமைக்காத காரணத்தினால், ரோடு மோசமாக, குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பெய்த மழையால் அந்த ரோடு சேறும், சகதியுமாய் மாறி, மோசமான நிலையில் உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் முத்தையாபுரத்தில் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கூறினர். அதனைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்ட பொது செயலாளர் சத்தியசீலன் தலைமையில் அப்பகுதி மக்கள் சாலையில் வாழை மரக்கன்றுகளை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தெற்கு மண்டல தலைவர் மாதவன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் அசோக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மண்டல செயலாளர் பாலகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஒரு வாரத்தில் அந்த பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடைபெற உள்ளதால் பொதுமக்கள் முளைப்பாரி உடன் அந்த பகுதியில் செல்வார்கள். அதற்கு முன்பு இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.