சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரிபொதுமக்கள் திடீர் போராட்டம்
சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நகராட்சி 28-வது வார்டுக்குட்பட்டது மணிநகர். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அங்குள்ள சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்தது.
பின்னர் அப்பணிகள் முடிந்ததும் அங்கு மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அப்பகுதியில் தார் சாலை போடப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரத்தில் பெய்த பலத்த மழையினால் அங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அப்பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பா.ஜ.க.வினரும் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். அப்போது தார் சாலை போட விரைந்து நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக தார் சாலை அமைக்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.