ஊராட்சி ஒன்றிய அலுவலக கதவை பூட்டி பொதுமக்கள் போராட்டம்-மறியல்
ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட இடத்தை தானமாக கொடுத்தும் பணிகளை ெதாடங்காதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊராட்சி மன்றம்
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட ஓச்சலம் ஊராட்சி அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த ஊராட்சியில் புதிய ஓச்சலம், பழைய ஓச்சலம், ஆதி திராவிடர் காலனி, அருந்ததியர்பாளையம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கான அலுவலகம் ஓச்சலத்தில் உள்ளது. அந்த கட்டிடம் பழுதாக உள்ளதால் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ம் ஆண்டின் கீழ் ரூ.39.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கட்டிடம் கட்ட போதுமான அளவு இடம் இல்லை என துறை அதிகாரிகள் கூறியதாகவும், இதற்காக பழைய ஓச்சலத்தில் உள்ள பொதுமக்களின் சார்பாக 5 சென்ட் நிலம் தானமாக எழுதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தடுத்து நிறுத்தினர்
ஆனால் அங்கு கட்டிடம் கட்டாமல் திடீரென்று ஊராட்சிக்குட்பட்ட வேறு இடத்தில் கட்டிடம் கட்டும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய ஓச்சலம் பகுதி பொதுமக்கள் கட்டிடம் கட்டும்பணியை கடந்்த சில மாதங்களுக்கு முன்பு தடுத்து நிறுத்தினர்.
பின்பு 2 மாதத்திற்கு கழித்து தங்கள் பகுதியில் தானம் வழங்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் நேற்்று வரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
இதனால் பழைய ஓச்சலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊர்வலமாக கையில் பதாகைகளுடன் வந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.
சாலைமறியல்
அதன்பின் வட்டார வளர்ச்சி அலுவலக கதவை பூட்டினர். இதைதொடர்ந்து நெமிலி- அரக்கோணம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.