பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்பாதாள சாக்கடை தொட்டி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனத்தில் பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் நடந்த பாதாள சாக்கடை திட்ட தொட்டி அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-11 18:45 GMT


திண்டிவனம்,

பொதுமக்கள் எதிர்ப்பு

திண்டிவனம் வகாப் நகர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தொட்டி அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாதாள சாக்கடை திட்ட தொட்டியை வேறு இடத்தில் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வகாப் நகர் பகுதிக்கு வந்து பாதாள சாக்கடை திட்ட பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.

பொக்லைன் எந்திரம் முற்றுகை

இதைபார்த்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தி, பொக்லைன் எந்திரத்தை முற்றுகையி்ட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இப்பிரச்சினை குறித்து சப்-கலெக்டர் கட்டா ரவியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்