ரோட்டில் வாழைமரங்களை நட்டிய பொதுமக்கள்
சுரண்டை அருகே, சாலையை சீரமைக்கக்கோரி ரோட்டில் வாழைமரங்களை நட்டிய பொதுமக்கள்
சுரண்டை:
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே சேர்ந்தமரம் பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக சென்றது.. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதனை கண்ட இளைஞர்கள் அந்தப் பகுதியில் உள்ள கடையில் சோப்பு வாங்கி துணி துவைத்து குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர்.
ஆனால் குடிநீர் குழாயை சீரமைக்க தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கப்படாமல் அப்படியே விட்டுவிட்டனர். இது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாக கூறி, அதே இடத்தில் வாழை மரக்கன்றுகளை நட்டு வைத்து நூதன போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகாவது உடனடியாக பள்ளத்தை சரி செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.