பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் கேட்டு குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் கேட்டு குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-04-03 19:58 GMT

முன்னாள் ராணுவ வீரர்கள் மனு

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட செயலாளர் பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 44 நாட்களாக ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகளை களைய வலியுறுத்தி ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் மூலம் ஜனாதிபதி, பிரதமர், ராணுவ மந்திரி ஆகியோருக்கு மனு அளித்தனர். அதன்படி அரியலூரில் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த மனுவை அளித்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

அரியலூர் அருகே வாரணவாசி கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை சேர்ந்த 40 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டா இடத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு, அந்த இடத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்கக்கோரி வாரணவாசி ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

பாளையப்பாடியை சேர்ந்த திருநாவுக்கரசு அளித்த மனுவில், பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் இருந்து புள்ளம்பாடி வழியாக திருமானூர்- வாழப்பாடி தார் சாலைகளில் கனரக லாரிகள் அதிக எடையுடன் 24 மணி நேரமும் சென்று வருகின்றன. கீழப்பழுவூர் வழியாக செல்ல வேண்டிய இந்த கனரக லாரிகள், இந்த தார் சாலையில் செல்வதால் சாலைகள் சேதமடைகின்றன. எனவே அந்த வழியாக லாரிகள் செல்வதை தடை செய்ய வேண்டும், என்று கூறியிருந்தார். அணைக்குடி கிராம மக்கள் சார்பில் சுப்பிரமணியின் அளித்த மனுவில், காசாண்டி குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிவன் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

இலவச பஸ் பயண அட்டை

மேலும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெராடர்பாக பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 22 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டைகளும், சத்துணவு துறையின் சார்பில் பணியின்போது உயிரிழந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான ஆணையும், ஒரு நபருக்கு சமையலர் பணியிடத்திற்கான ஆணையும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்