கிணத்துக்கடவு பகுதியில் புதிதாக கல்குவாரி உரிமம் வழங்கக் கூடாது-மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பொதுமக்கள் மனு

கிணத்துக்கடவு பகுதியில் புதிதாக கல்குவாரி உரிமம் வழங்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2023-04-06 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் புதிதாக கல்குவாரி உரிமம் வழங்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

பாலைவனமாக மாறும் நிலை

கிணத்துக்கடவு அருகே உள்ள பொட்டையாண்டிபுறம்பு பொதுமக்கள் சார்பில் கோவை, சிட்கோ பகுதியில் உள்ள கோவை தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- கிணத்துக்கடவு மேற்கு பகுதி பாலக்காட்டு கணவாய் வழியாக ஆண்டுக்கு சராசரி 900 மில்லி மீட்டர் முதல் 1500 மில்லி மீட்டர் வரை தென்மேற்கு பருவமழை பெய்கிறது. வடகிழக்கு பருவமழையும் மற்ற பகுதியை காட்டிலும் அதிகமாக பெய்கிறது. எங்கள் பகுதியில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை உள்ளூர் தேவைக்கு மட்டுமே கல் உடைத்து எடுக்கப்பட்டது. ஆனால் இன்று அண்டை மாநிலத்திற்காக உரிமம் வழங்கப்பட்டு கல் உடைத்து எடுப்பதால் எங்கள் பகுதியில் எவ்விதமான நீர் ஆதாரங்கள் இல்லை. முழுக்க, முழுக்க மலையை நம்பி உள்ளதால் எங்கள் பசுமை சோலை உள்ள பகுதி பாலைவனமாக மாறும் நிலையில் உள்ளது.

கல்குவாரி உரிமம் வழங்கக்கூடாது

எங்கள் பகுதியில் புதிதாக கல்குவாரி உரிமம் வழங்கக்கூடாது. அதிக ஆழமாக வெட்டி கல்குவாரி தடை செய்ய வேண்டும். இல்லையேல் எங்கள் பகுதி விவசாயிகள் வேறு இடத்தில் குடியேறுவதை தவிர வேறு வழியில்லை. எனவே புதிதாக உரிமம் வழங்காமல் எங்கள் பகுதியை விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்