அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு

அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-01-30 19:16 GMT

தாமரைக்குளம்:

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் வாலாஜநகரம் புது காலனி தெருவை சேர்ந்த பொதுமக்கள உள்ளிட்டோர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், வாலாஜா நகரம் புது காலனி தெருவில் கடந்த 1994-ம் ஆண்டு தமிழக அரசால் 32 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 32 குடும்பங்களும் அப்பகுதியில் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம். இங்கு வசிக்கும் அனைவரும் கூலி தொழிலாளர்கள்தான். ஊராட்சிக்கு தவறாது வீட்டு வசதி வரி செலுத்துகிறோம். ஆனால் 29 ஆண்டுகளாக புது காலனி தெருவுக்கு மின்சாரம், குடிநீர், சாலை, கழிவுநீர் வாய்க்கால், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படாத நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர், எங்கள் பகுதியில் நேரில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழர் நீதி கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் சுபா இளவரசனும் மனு அளித்தார்.

பட்டா வழங்க வேண்டும்

ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ஜெயங்கொண்டத்தில் வடக்கு தெரு, காமராஜ்புரம், அம்பேத்கர் நகர், அண்ணா நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு உடையார்பாளையம் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தான். எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

பன்றிகள் வளர்க்க தடை...

ராயபுரம் கிராமத்தில் பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தும் குளத்திலும், சிவன் மற்றும் பெருமாள் கோவில் பகுதிகளிலும், மாணவ, மாணவிகள் பயிலும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால் குடிநீர் மாசுபடுவதோடு, சுகாதார கேடும் விளைகிறது. விளை நிலங்களையும் பன்றிகள் சேதப்படுத்துகிறது. சோளம் போன்ற பயிர்களை பெரிதும் பாழ்படுத்துகிறது. தெருக்களிலும் சுற்றித்திரிவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பன்றிகள் வளர்ப்பதை தடை செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பலர் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்