ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
ஏர்வாடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏர்வாடி:
ஏர்வாடி திருவழுதீஸ்வரர்-பெரியநாயகி அம்பாள் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் முன் காலத்தில் வைகாசி மாதம் தேரோட்ட திருவிழா நடத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் திருவிழா நடத்தப்படவில்லை. இதனால் தேரும் பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த 42 ஆண்டுகளாக தேரோட்ட திருவிழா நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய தேர் செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர் வெள்ளோட்டத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஆனால் ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் தேர் வெள்ளோட்டம் நடத்துவதில் இடையூறு இருப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி தலைமையில் பேரூராட்சி, அறநிலையத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி ஆக்கிரமிப்புகள் குறியீடு செய்யப்பட்டது. நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரஜத்சதுர்வேதி தலைமையில் போலீசாரும் குவிக்கப்பட்டனர். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து வருகிற 25-ந் தேதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் என்று தாசில்தார் இசக்கிப்பாண்டி அறிவித்தார்.