சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கூடலூர் அருகே கீழ் நாடுகாணியில் தடுப்புச்சுவர்கள் கட்டாமல் சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பணி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-20 20:45 GMT

கூடலூர்

கூடலூர் அருகே கீழ் நாடுகாணியில் தடுப்புச்சுவர்கள் கட்டாமல் சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து பணி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை பணி நிறுத்தம்

கூடலூர் தாலுகா கீழ்நாடுகாணியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து மயானத்துக்கு செல்லும் சாலையில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நெல்லியாளம் நகராட்சி மூலம் ரூ.20 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அப்போது பொக்லைன் எந்திரம் உதவியுடன் பழைய சாலையை உடைத்து அகற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து அகலப்படுத்துவதற்காக சாலையின் இருபுறமும் மேடான இடத்தின் கரையில் இருந்த தடுப்புச்சுவர்களும் அகற்றப்பட்டன. இதை பார்த்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பணியும் நிறுத்தப்பட்டது. அப்போது புதிய சாலை அமைத்த பிறகு கூடுதல் நிதி ஒதுக்கி தடுப்புச்சுவர் கட்டப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

இதை அப்பகுதி மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சாலை அமைத்த பிறகு தடுப்புச்சுவர் கட்டாமல் இருந்தால், மேடான இடத்தில் உள்ள வீடுகள் இடியும் அபாயம் ஏற்படும். எனவே, தடுப்புச்சுவருடன் சாலை அமைக்க வேண்டும். அதுவரை பணி மேற்கொள்ளக்கூடாது என கூறினர். இதைத்தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சாலையின் இடது புறம் மேடான பகுதியில் வீடுகள் உள்ளன. இதனால் மண் சரிவு ஏற்படாமல் இருக்கும் வகையில் கற்களுடன் கூடிய தடுப்புச்சுவர்கள் இருந்தது. தற்போது புதிய சாலை அமைக்கும் பணிக்காக தடுப்புச் சுவர்கள் அகற்றப்பட்டு உள்ளது. நல்ல நிலையில் உள்ள சாலையை இடித்து விட்டு ரூ.20 லட்சத்தில் புதிய சாலை அமைக்க நகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். சாலையை அமைத்துவிட்டு அதன் பிறகு தடுப்புச்சுவர்கள் கட்ட வாய்ப்பு இல்லை. மேலும் 700 மீட்டர் தூரம் இருக்கும் நிலையில் 430 மீட்டர் மட்டுமே சாலை அமைக்கப்பட உள்ளது. எனவே, தடுப்புச்சுவருடன் கூடிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்