அடிப்படை வசதிகள் செய்து தராமல் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

அடிப்படை வசதிகளை செய்து தராமல் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-02 18:45 GMT

பொள்ளாச்சி

அடிப்படை வசதிகளை செய்து தராமல் கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம சபை கூட்டம்

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை ஆகிய வட்டாரங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைக்காலத்தில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு ஆகிய திட்டப்பணிகள் குறித்தும், பண்ணை சார்ந்த தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள்,கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு

பெத்தநாயக்கனூர் ஊராட்சியில் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள், அந்த பகுதியில் நீண்ட காலமாக கட்டப்படாமல் உள்ள கழிப்பறை மற்றும் வடிக்கால் வசதி, சாலை வசதி ஆகியவற்றை நிறைவேற்ற கோரி ஊராட்சி தலைவர் ஜெகநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணாநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த வந்திருந்த அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். விரைவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்