கழிவுநீர் வெளியேறும் குழாயை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தாழக்குடியில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாயை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-02 20:31 GMT

ஆரல்வாய்மொழி:

தாழக்குடியில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறும் குழாயை அடைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கழிவுநீர் குழாய் அடைக்கும் பணி

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சி குழாய் அமைத்து விட வேண்டும் என பொதுமக்களை அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அதை பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது. இந்தநிலையில் தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட சீதப்பால் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு சில வீடுகளில் கழிவுநீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது. நேற்று 2-ம் நாளாக இந்த பணி நடந்தது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இதற்கு அந்த பகுதி மக்கள் முன்னாள் கவுன்சிலர் மேரி ஜெசிந்தாள் தலைமையில் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பணியையும் தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் அப்துல்காதர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், வார்டு கவுன்சிலர் எழிலரசி ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து விட்டு நடவடிக்கையில் ஈடுபடலாம் எனக்கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

அதாவது வருகிற திங்கட்கிழமை அன்று பொதுமக்கள், மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பது என்றும், அவரது பதில் கிடைக்கும் வரை அடைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் குழாய் அடைக்கும் பணியை நிறுத்தி விட்டு சென்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்