எருமாட்டில் பயனற்று கிடக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்-சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
எருமாட்டில் பயனற்று கிடக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
பந்தலூர்
எருமாட்டில் பயனற்று கிடக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
பந்தலூர் அருகே எருமாட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எருமாடு, இண்கோநகர், வெட்டுவாடி, மாதமங்கலம், பனஞ்சிறா, தாளூர், கையுன்னி, சேரம்பாடி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி உள்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் பல்வேறு சான்றிதழ்களை பெறவந்து சென்றனர். இந்த கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பழுதடைந்து காணப்பட்டது. அலுவலக கட்டிடத்தை சீரமைக்ககோரி பொதுமக்களும் சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கட்டிடத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டது.
கிராம நிர்வாக அலுவலகத்தில்...
இதனால் மழைநீர் உள்ளே கசிந்தது. இதனால் வருவாய்ஆய்வாளரும் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் கிராம நிர்வாக அலுவலரின் குடியிருப்பில் வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். பழைய அலுவலக கட்டிடத்தின் மேற்கூரையும் சுவர்களும் வெடித்து காணப்படுகிறது. கதவுகளும் ஜன்னல்களும் கரையான்களால் அறிக்கப்பட்டு உடைந்த நிலையில் கிடக்கிறது. கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய அலுவலக கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.