பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்

பொள்ளாச்சியில் மனுநீதிநாள் முகாமில் 170 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் பிரியங்கா பேசினார்.

Update: 2022-11-23 19:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மனுநீதிநாள் முகாமில் 170 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் பிரியங்கா பேசினார்.

மனுநீதி நாள் முகாம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை, சலவை பெட்டி, தையல் எந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் 309 பேருக்கு ரூ.17 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.

மேலும் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்த மானியம் மற்றும் இடுப்பொருட்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதில் தாசில்தார் வைரமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து சப்-கலெக்டர் பிரியங்கா மனுக்களை பெற்றார். இதில் மொத்தம் 170 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து சப்-கலெக்டர் பிரியங்கா பேசும்போது கூறியதாவது:-

அரசின் திட்டங்கள்

மனுநீதி நாள் இரு காரணங்களாக நடத்தப்படுகிறது. பொதுமக்களின் குறைகளை தெரிவிப்பதற்கும், மற்ற துறை சார்ந்த திட்டங்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் அரசின் திட்டங்களை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். மேலும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லை.

பொதுமக்கள் நேரடியாக வந்து மனுக்களை கொடுக்க தேவையில்லை. ஆன்லைன் மூலம் மனுக்களை அனுப்பினால் போதும். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை பரிசீலனை செய்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அலைக்கழிக்க கூடாது

முன்னதாக பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறுகையில், இதுபோன்ற பல முகாம்கள் நடத்தப்பட்டும் பொதுமக்களின் குறைகள் தீரவில்லை. அதிகாரிகள் பொதுமக்கள் மனுக்களை கொடுக்கும் போது, அந்த மனுக்களுக்கு தீர்வு என்பதை தெரியப்படுத்த வேண்டும். பொதுமக்களை மீண்டும் மனுக்களை கொடுக்க வைத்து அலைக்கழிக்க கூடாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்