கள்ளக்குறிச்சியில் நடந்தபொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்

கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2023-03-20 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 387 மனுக்கள் பெறப்பட்டன.

அதைத்தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 9 பேருக்கு தலா ரூ.5,190 மதிப்பிலான தையல் எந்திரம் மற்றும் 6 பேருக்கு தலா ரூ.4,871 மதிப்பிலான சலவைபெட்டியை நலத்திட்ட உதவியாக கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்